கர்ப்பரட்சாம்பிகை கோயில்
GarbarakshambigaiTemple

குழந்தை பாக்கியம் மட்டுமல்ல; திருமண பாக்கியம்  கூடிவராத பெண்களும் திருக்கருகாவூர்  கர்ப்பரட்சாம்பிகையின் சந்நிதிக்கு வந்து, அந்தத் தாயை மனதாரப் பிரார்த்தனை செய்து, படி மெழுகி, அர்ச்சனை செய்து வழிபட்டால், விரைவில் திருமணம் கூடிவரும் என்று சென்ற இதழில் பார்த்தோம். 

அதேபோல், முற்பிறவிகளின் கர்மாக்கள் காரணமாக புத்திர பாக்கியம் இல்லாமல் இருப்பின், வியாழக்கிழமைகளில் கர்ப்ப ரட்சாம்பிகை சந்நிதியில் நெய் தீபம் ஏற்றி அம்பாளை வழிபட்டு வந்தால், வம்ச தோஷம் நீங்கி, புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது திண்ணம். அம்பிகை இப்படியென்றால், அடியார்களை வாட்டும் நோய்நொடிகளில் இருந்து அவர்களைக் காத்தருள செய்கிறார், சுவாமி முல்லைவனநாதர்.

வளர்பிறை பிரதோஷ நாளில், கருகாவூரின் நாயகர் முல்லைவன நாதருக்குப் புனுகு சார்த்தி வணங்கினால், தீராத நோய்கள் அனைத்தும் தீர்ந்துவிடும் என்பதும் இத்தலத்துக்கான மற்றுமொரு நம்பிக்கை. வெளியிலிருந்து வாங்கி வரப்படும் புனுகை இறைவனுக்குச் சார்த்த அனுமதி கிடையாது. புனுகு சார்த்த விரும்பும் பக்தர்கள், அலுவலகத்தில் ரூ.100 செலுத்தி, ரசீது பெற்றுக் கொண்டால் வளர்பிறை பிரதோஷ நாளில் சேவார்த்திகள் முன்னிலையில் புனுகு சார்த்தி பிரசாதம் வழங்கப்படுகிறது. வர இயலாதவர்களுக்கு, தபாலில் பிரசாதம் அனுப்பி வைக்கப்படுகிறது.

கலியுக அதிசயம் கர்ப்பரட்சகி!
கோயிலின் வரலாற்றுச் சிறப்புகளை விவரித் தார், முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் பாபநாசம் குமார். 

‘‘இத்தலம் வரலாற்று காலம்தொட்டே, கருவுற்ற மகளிருக்கான ஆரோக்கியத்தலமாக இருந்து வந்துள்ளது. போர் நிகழும் காலங்களில், கருவுற்ற மகளிருக்கு அடைக்கலம் தரும் இடமாக இவ்வூர் திகழ்ந்ததாக வரலாற்றுக் குறிப்பு உள்ளது. பின்னர் ஏழாம் நூற்றாண்டில் கோயில் கட்டத் தொடங்கி, கருவறை பல்லவர்களாலும் பெரிய கோயிலாகச் சோழர்களாலும் கட்டப்பட்டு, சுந்தரர் காலத்தில் கற்கோயிலாகத் திகழ்ந்துள்ளது. பழங்காலத்தில் கொடிகளால் சூழப்பட்டிருந்த இக்கோயில், பெரியோர் மேற்கொள்ளும் ‘பஞ்ச வன க்ஷேத்திரம்’ என்னும் யாத்திரையில் முதலில் தரிசிக்கக்கூடிய முல்லைவனமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

கோயிலின் வெளிப் பிராகாரம் மற்றும் முன் வாயிலில் இருந்து அம்மன் சந்நிதி வரையிலான மண்டபம் எல்லாமே இங்கு வந்து குழந்தைச் செல்வம் பெற்ற தம்பதியர் மனமுவந்து செய்து கொடுத்தது. ஐம்பது வருடங்களுக்குமுன் மகா பெரியவா இங்கே வந்து தங்கியிருந்தபோது, காலையில் காவிரியில் குளித்துவிட்டு வந்து வியாச பூஜை பண்ணுவார். சோமாஸ்கந்த அமைப்பில் கோயில் இருப்பதால், பெரிய பிராகாரம்தான் சுற்றி வருவார். கல்லும் முள்ளுமாகக் கிடக்கும் சுற்றுப் பிராகாரத்தில் அதன் மேலேயே வேக வேகமாக நடப்பார். பின்னாளில் இங்கே வந்து பலன் பெற்ற பக்தையான ஸ்ரீப்ரியா அம்மாதான் சுற்று மண்டபம் கட்டிக் கொடுத்திருக்காங்க!’’ என்கிறார் குமார். அறக்கட்டளை சார்பில் கோயிலுக்கு எதிரிலுள்ள குளம் தூர்வாருதல், அன்னதான மண்டபம் கட்டுதல் போன்ற பணிகளையும் செவ்வனே செய்து முடித்துள்ளனர்.

வீட்டில் ஒரு மழலையின் ‘குவா குவா’ சத்தம் கேட்காதா என ஏங்கும் தம்பதியர், திருக்கருகாவூர் வந்து, முறைப்படி பிரார்த்தனை செய்து, நம்பிக்கை யோடு வேண்டிக்கொண்டால் கண்டிப்பாகக் கண்திறப்பாள் கர்ப்பரட்சகி. கரு கொடுப்பாள்; உரு கொடுப்பாள்; கரு காப்பாள்; பிரசவத்தில் துணையிருப்பாள்... என்றும் துணை வருவாள்.

தங்கத் தொட்டில்...
தமிழகக் கோயில்களிலேயே இங்கே மட்டும்தான் தங்கத் தொட்டில் பிரார்த்தனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. `மற்ற கோயில்கள் போல தங்கரதம் செய்ய வேண்டும் என்ற யோசனை எழுந்தபோது, இது மகப்பேறு அருளும் தலம் என்பதால் தங்கத் தொட்டில் செய்துவைத்தோம்' என்கிறார்கள் கோயில் நிர்வாகத்தினர். அன்னை கர்ப்பரட்சாம்பிகையின் அருளால் குழந்தை பாக்கியம் பெற்றவர்கள், தங்கத் தொட்டிலில் தங்கள் சிசுவைப் படுக்கவைத்து, அம்பாள் சந்நிதியை ஒருமுறை வலம்வருகின்றனர். தங்கத்தால் செய்யப்பட்ட தொட்டிலுக்குச் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளதால், அழகாக உருண்டு வரும்.  குழந்தைக்காக வேண்டி வருபவர்களும் இந்தப் பிரார்த்தனையைச் செய்யலாம். அவர்கள், குழந்தைக்குப் பதிலாகக் கோயிலில் தரப்படும் ஸ்கந்தர் விக்கிரகத்தைத் தொட்டிலில் இட்டு, அம்பாள் சந்நிதியை வலம்வந்தால், குழந்தை பாக்கியம் நிச்சயம் கிடைக்கும் (இவை இரண்டுக்குமே கட்டணம் ரூ.550).


எப்படிச் செல்வது?
தஞ்சை மாவட்டம் பாபநாசத்துக்கு தெற்கே 6 கி.மீ தூரத்தில் உள்ளது திருக்கருகாவூர். தஞ்சையிலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்திலும் கும்பகோணம் நகரிலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்திலும், சாலியமங்கலத்திலிருந்து வடக்கே சுமார் 10 கி.மீ தூரத்திலும் இவ்வூர் இருப்பதால், எல்லா திசைகளிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.

To Share :