உச்சி பிள்ளையார் கோவில்

Ucchipillayar

புகழ் பெற்று விளங்கும் விநாயகத் திருத்தலங்களில் குறிப்பிடத்தக்கது திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவில். இந்த கோவில் திருச்சியின் மையப் பகுதியில் அமைந்துள்ளது.

இந்த மலையின் உயரம் 273 அடி. மொத்த படிகள் 417. மலையின் அடிவாரத்தில் இருக்கும் மாணிக்க விநாயகரை தரிசித்து விட்டு மேலே சென்று உச்சி பிள்ளையாரை தரிசிக்க வேண்டும்.

உச்சி பிள்ளையார் கோவிலுக்கு செல்லும் வழியில் தாயுமானர் கோவில் இருக்கிறது. இங்கு சிவபெருமான், தாயுமானவராக அருள் பாலிக்கிறார். தாயுமானவர் என்று அவர் அழைக்கப்படுவதற்கு காரணமும் உண்டு, கதையும் உண்டு. அதை இப்போது அறிவோம்.

பிளாஷ்பேக்..
முன்பொரு காலத்தில் திருச்சி நகரில் சிவ பக்தை ஒருத்தி வாழ்ந்து வந்தாள். அவள் கருவுற்றாள். பிரசவ நேரம் நெருங்கியது. தன் தாயின் வரவிற்காக அந்த பெண் காத்திருந்தாள். பிரசவ வலி துவங்கி விட்டது ஆனாலும் அந்த பெண்ணின் தாய் வரவில்லை. அதேசமயம், அவளது தாய், மகளை பார்க்க அருகிலிருந்த ஊரிலிருந்து வந்து கொண்டிருந்தாள். காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கரையை கடக்க முடியவில்லை. தாய் தவித்தாள். மகள் என்ன கஷ்டப்படுகிறாளோ என கண்ணீர் வடித்தாள். சிவபெருமானை பிரார்த்தித்தாள். சிவ பெருமானே நீ தான் என் பெண்ணிற்கு துணையிருக்க வேண்டும், நீ தான் அவளை காப்பாற்ற வேண்டும் என மனம் உருக பிரார்த்தனை செய்தாள். பக்தர்களுக்கு அருள்வதில் சிவனுக்கு நிகரேது. பக்தையின் வேண்டுதலுக்கு செவி சாய்த்த சிவபெருமான் பெண்ணின் தாய் வேடம் பூண்டார். அந்த பெண்ணின் தாய் போலவே பல பொருட்களை தலையில் சுமந்து கொண்டு அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றார். பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருந்த பெண் அந்த வேதனையிலும் தாயைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தாள். தாய் உருவிலிருந்த சிவபெருமான் அவளுக்கு பிரசவம் பார்த்து தாயும் சேயும் நலமடைந்த பின் மறைந்தார். காவிரியில் வெள்ளம் வடியத் தொடங்கியது. மகளைக் காண ஓடோடி வந்தாள் தாய். மகளைப் பார்த்து மகளே நலந்தானா? என்றாள். மகளுக்கோ ஆச்சரியம்.
 
என்னம்மா நீதானே பிரசவம் பார்த்தாய் நீயே இப்படி கேட்கிறாயே என்றாள். உண்மையை உணர்ந்தாள் தாய். சிவன் இருக்கும் திசை நோக்கி கைகூப்பி நன்றி தெரிவித்தாள். சிவபெருமானே நீயே தாயுமாகி என் மகளுக்கு பிரசவம் பார்த்திருக்கிறாய். என்னே உன் கருணை என கண்ணீர் மல்க நன்றி கூறினாள். அன்று முதல் இந்த சிவபெருமான் தாயுமானவன்என அழைக்கப்படுகிறார். இன்றும் சுகப்பிரசவமாக வேண்டும் என்பதற்காக பக்தர்கள் சிவ பெருமான் சன்னிதியில் வாழைத்தார் கட்டுவதைக் காணலாம், வாழைத்தார் கட்டினால் சுகப்பிரசவமாகும் என்பது நம்பிக்கை. நம்பினோரை கைவிட மாட்டான் சிவபெருமான் என்பது உண்மை தானே. தாயுமானவர் தேர்த் திருவிழா பிரம்மாண்டமான முறையில் வருடா வருடம் நடைபெறுகிறது. தாயுமானவனை தரிசித்து விட்டு மேலும் படி ஏறும் போது நம் வலது புறம் மணிக்கூண்டு காணப்படுகிறது. இந்த மணியின் ஒலி திருச்சி நகரம் முழுதும் கேட்கும். நம் இடப்புறம் குகைப் படி இருக்கிறது. அதன் கதவு பூட்டப்பட்டிருக்கிறது. அந்த குகைப்படிகள் அந்த கால ராஜாக்களால் பயன்படுத்தப்பட்டது என்றும் இந்த குகைப்படிகள் திருச்சியிலிருக்கும் உறையூருக்கு செல்கிறது என கூறப்படுகிறது. இந்த குகைப்படிகள் தஞ்சாவூர் நகருக்கு செல்கிறது எனவும் கூறப்படுகிறது. திருச்சியும், தஞ்சாவூரும் சோழ மன்னர்களால் ஆளப்பட்டு வந்ததால் இந்த குகைப்படிகள் தஞ்சாவூர் வரை செல்வதாக கூறப்படுகிறது. மலைகளில் செதுக்கப்பட்ட படிகளில் ஏறி நாம் உச்சி பிள்ளையாரை தரிசிக்க செல்கிறோம். பிள்ளையார் சன்னிதியின் நுழைவு வாயில் சிறிதாக இருப்பதால் நாம் குனிந்தே உள்ளே செல்ல வேண்டும். மலை உச்சியில் அமர்ந்து திருச்சி நகர் மூழுவதும் அருளை அள்ளி வழங்கும் ஆனை முகத்தோனின் தரிசனம் கண்டு நம் மெய்சிலிர்த்து போகிறது.

எப்படி வந்தார் பிள்ளையார்?
உச்சிப் பிள்ளையாரின் தலையில் சிறு வீக்கம் காணப்படுகிறது. இது ராவணணனின் தம்பி விபீஷணன் குட்டியதால் ஏற்பட்டது. அது குறித்து கூறப்படும் கதை: சீதையை கடத்திச் சென்ற ராவணனிடம் போரிட்டு ராமன் இலங்கை சென்ற போது ராவணணின் தம்பி விபீஷணணன் ராமருடன் சேர்ந்து கொண்டான். சீதையை மீட்ட பின் ராமர் அயோத்தி வந்து பட்டாபிஷேகம் செய்து கொண்டார். பட்டாபிஷேகம் முடிந்த பின் தன்னுடன் வந்த விபீஷணனுக்கு ரங்கநாதர் விக்கிரகத்தை கொடுத்தார் ராமர். அந்த விக்கிரகத்தை கொடுக்கும் போது அந்த விக்கிரகத்தை பூமியில் வைத்து விட்டால் மீண்டும் அதை எடுக்க முடியாது. அது பூமியில் பதிந்து விடும் என கூறினார். வீபிஷணன் அந்த விக்கிரகத்துடன் இலங்கை திரும்பி வந்து கொண்டிருந்தான். காவிரி ஆற்றை சமீபித்ததும் ஆற்றிலிருந்து வீசிய குளிர்ந்த காற்று அவனை தாலாட்டியது. காவிரி ஆற்றின் ரம்மியம் அவனை கவர்ந்தது. ஆற்றில் நீராட வேண்டும் என்ற ஆசையை அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை. ரங்கநாதர் விக்கிரகத்தை பூமியில் வைக்கக்கூடாது. யாரிடமாவது கொடுக்கலாமா என சுற்றும் முற்றும் நோட்டமிட்டான் விபீஷணன். அப்போது பிராமண சிறுவன் வேடத்தில் அங்கு தோன்றினார் விநாயகர். அவரை அழைத்து அவரிடம் ரங்கநாதர் விக்கிரகத்தை கொடுத்த விபீஷணன், நான் நீராடி விட்டு வரும் வரை இந்த விக்கிரகத்தை வைத்துக் கொண்டிரு, பூமியில் வைத்து விடாதே. நான் நீராடிவிட்டு வந்து வாங்கிக் கொள்கிறேன் என்றான். விநாயகர் நான் மூன்று முறை உன்னை கூப்பிடுவேன். நீ வராவிட்டால் நான் விக்கிரகத்தை நிலத்தில் வைத்து விடுவேன் என கூறினார். விபீஷணன் நீராட சென்ற பிறகு சிறிது நேரம் கழித்து மூன்று முறை கூப்பிட்டார் விநாயகர். ஆற்றில் ஆனந்தமாக நீராடிக் கொண்டிருந்த விபீஷணன் காதில் அது விழவில்லை. பூமியில் விக்கிரகத்தை வைத்து விட்டார் விநாயகர். அந்த விக்கிரகம் விஸ்வரூபம் எடுத்தது. மிகப் பெரிதானது விக்கிரகம். நீராடி விட்டு வந்த விபீஷணன் விக்கிரத்தை எடுக்க பார்த்தான் முடியவில்லை. விக்கிரகம் பெரியதாகி பூமியில் பதிந்து விட்டது. விநாயகரை தேடினான் விபீஷணன். விநாயகர் சிறிது தூரம் தள்ளி ஓடிக் கொண்டிருப்பதைக் கண்டு அவரை துரத்தினான். விநாயகர் ஓடி வந்து மலைக்கோட்டையின் மேல் உட்கார்ந்து கொண்டார். அவர் விக்கிரகத்தை பூமியில் வைத்தததால் கோபம் கொண்ட விபீஷணன் அவர் தலையில் ஓங்கி குட்டினான். அவர் தலையில் வீக்கம் ஏற்பட்டது. அப்போது விநாயகர் தன் திவ்ய தரிசனத்தை விபீஷணுக்கு காட்டி அருளினார். பூமியில் பதிந்து போன அந்த ரங்கநாதர் விக்கிரகம் தான் இன்றும் ஸ்ரீரங்கத்தில் அனந்த சயனத்தில் அன்பர்களுக்கு அருளி வரும் ரங்கநாதர். தன் லீலையால் ரங்கநாதரையும் திருச்சியில் இருக்க வைத்து விட்டார் விநாயகர்.

சதுர்த்தி விழா ..
இந்த உச்சி பிள்ளையார் கோவிலில் நான்கு கால பூஜை சிறப்பாக நடைபெற்று வருகிறது. விநாயகர் சதுர்த்தி விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மலைக் கோட்டையில் விநாயகனை தரிசிக்கும் பக்தர்கள் திருச்சி முழுதும் இருக்கும் ரம்மியமான காட்சிகளையும் காணலாம். கேட்டதையெல்லாம் கொடுக்கும் கருணைக் கடல், வெவ்வினையை வேரறுக்கும் வல்லோன் உச்சி பிள்ளையாரை வணங்கி அவர் அருள் பெற்ற ஆனந்தமாக வாழ்வோம்.

To Share :