கீதையின் பாதையில்..

geethaiyin-padayal

பயனில் ஆர்வம் செலுத்துவோரைவிட, செயலில் ஆர்வம் காட்டுபவரைக் கீதை கொண்டாடுகிறது. அதன் அவசியத்தையும் நியாயத்தையும் கொஞ்சம் கவனிப்போம். இரண்டு விவசாயிகள். ஒருவர் கர்மயோகி. மற்றொருவர் சராசரி. லாபத்தைக் குறிக்கோளாக உடைய சராசரி விவசாயி, கரும்புபயிரிடுவதை விட்டு கஞ்சா பயிரிட்டால் காசு கூட கிடைக்கும் என்றால், பயன் மீதுள்ள பற்றால் கஞ்சா பயிரிடுவார். கர்மயோகிஅப்படிச் செய்வாரா? மாட்டார். உழைப்பே அவரது தவம்; உழவே அவரது ஜபம். வேள்வியில் இருந்து பிரிக்க முடியாத அக்னி போல விவசாய பூமியில் இருந்துவிலக்க முடியாதவர் அவர். உழைக்காமல் வரும் காசு அவருக்கு அருவருப்பு தரும். கரன்சி காகிதங்களை மட்டுமே தின்னும்பணப்பசி அவருக்கு இல்லை.

          அந்த விவசாய கர்ம யோகியின் சாம்ராஜ்யம் விசாலமானது. கலப்பையும் கையுமாக அவர் களத்தில் இறங்கும் போதுகாலைக்கதிரவன் அவரைக் கைகூப்பி வரவேற்கிறான். வளைந்து நிற்கும் தொடுவானம் அந்த விவசாயிக்கான வரவேற்பு வளையம். இவரது கம்பீரத்தில் கால் பங்காவது கஞ்சா பயிரிடுபவன் அனுபவித்தது உண்டா? தேசத்ததின் தேவையை, நெல்லாலும் கோதுமையாலும் நிரப்பும் கடமை உணர்வு மிக்க விவசாயிகள் - கர்மயோகிகள். பாரதமாதாவின் தவப் புதல்வர்கள். செயலின் பயன் எப்படியும் நம்மை வந்தடையும். அதன் எதிர்பார்ப்பு செயலின் சுவையை, இன்பத்தைக் கொன்றுவிடும். ஆசார்ய வினோபாபாவே எளிமையாக இதை விளக்குகிறார். ""குழந்தை விளையாடுகிறது. அது விளையாடுவதில் உள்ளஇன்பத்திற்காகவே விளையாடுகிறது. இதனால் அதற்கு உடற்பயிற்சியின் பயன் தானே கிடைகிறது. ஆனால் அப்பயனிடத்தில்அதற்குக் கவனம் இருப்பதில்லை. அதற்கு இன்பம் முழுவதும் விளையாட்டிலேதான்.

      மனிதர்களை மூன்று வகையாகப் பிரிக்கிறது கீதை. செயலைச் செய்துவிட்டு பயனைக் கருதாமல் இருப்பது சத்வகுணம். பயனை விடுவது என்றால் செயலையும் விடுவோம்...செய்ய மாட்டோம் என்று சோம்பிக் கிடப்பது தமோ குணம். செயலையும் விட முடியாது. . பயனையும் விட முடியாது... நான் ஏன் பயனை விடவேண்டும் என்று போராடுவது ரஜோ குணம். பயனில் பற்றின்றி செயலில் கவனம் செலுத்திய காந்தியடிகள் போன்ற ஆன்ம ஞானிகள் கீதையின் புத்திரர்கள். உலக வரலாறு படித்தவர்கள் ஓர் உண்மை அறிவார்கள். தன் நாட்டு விடுதலைக்குப் போராடிய தலைவர்கள் விடுதலை விழாவில் முன்னிலை பெறுவார்கள். வெற்றியின் பயனாகவிடுதலை அடைந்த நாட்டின் தலைமைப் பொறுப்பு தரப்படும். பல சமயங்களில் பெறப்படும். ஆனால், விடுதலைப் போருக்குத் தலைமை பெற்ற காந்தி அடிகள் விடுதலை நாட்டின் தலைமையை ஏற்க விரும்பவில்லை. கொடியேற்று விழாவின் கோலாகலங்களில் மாலைகளுக்குத் தோளைத் தயார் செய்து கொள்ளாமல் தேசத்தின் நிர்மாணப்பணிகளுக்கு மக்களைத் தயார் செய்ய நவகாளி நோக்கிப் புறப்பட்டார் ஆதிசங்கரரும். ராமனுஜரும் பகவத் கீதைக்குப் பலவித உரை எழுதி மகிழ்ந்தனர். ஆனால். எலும்பாலும் சதையாலும் பாரதமாதாவே பகவத்கீதைக்கு எழுதிய உரைதான் மகாத்மா காந்தி!ஆனால், இன்று இந்தியாவில் நடப்பது என்ன? செயலைப் பற்றிய அக்கறையைவிட செயலின் பயனாகிய பணம் சம்பாதித்தல் ஜாம் ஜாமென்று ஜகஜ் ஜோதியாக நடக்கிறது!செயலின் விளைவாகிய பணத்தின் மீதான அக்கறை செயலையே கொல்லுகிற அளவு போய்விட்டது! நாடு தாங்குமா? பத்து மணிக்கு ஓர் இடத்தில் இருந்து புறப்படவேண்டிய அரசாங்கப் பேருந்து ஓடாது. ஏன்? அடுத்த சில நிமிடங்களில் அதேவழித்தடத்தில் ஓட வேன்டிய தனியார் பேருந்து முதலாளி அரசு ஊழியரைத் தக்கபடி கவனித்துக் கொண்டால் அரசு பஸ் ஓடாது.

 ஊழியர் நேர்மையானவர் என்றால் நேரக் கண்காணிப்பாளர் கவனிக்கப்படுவார். அவர் மசியவில்லையா? மேலிடம்கவனிக்கப்படும். மேலிடம் வேலை வாங்குவதற்கு பதிலாக வேலை பார்க்காதே என்று ஊழியரை எச்சரிக்கும்.

  பணம்.. பணம்.. செயலின் பயனான பணம் முக்கியமானால் செயல்கள் செத்தொழியும். லாரிகள் சில வழியாகச் செல்லக்கூடாது என்று அறிவித்து அதைக் கண்காணிக்க டிராபிக் கான்ஸ்டபிள் அங்கு நிறுத்தப்படுவார்.லாரிகளைத் தடுக்கும் செயல்மீது அக்கறையற்ற ஒரு கான்ஸ்டபிள் லாரி டிரைவர் கீழே எறியும் சில்லறை மீது ஆர்வம் கொண்டுகாசு பொறுக்கி எடுப்பது நாட்டில் சகஜமாகி வருகிறது. இந்தச் சீரழிவு ஏன்? செயலைவிட செயலின் பயனை விரும்புவதால் ஏற்படுகிறது. நேர்மாறாக இன்றைக்கும் உழைக்க வேண்டிய அவசியமே இல்லாத பல முதியவர்கள் இந்திய வீடுகளில் மகிழ்ச்சியாகஉழைப்பதைப் பார்க்கிறேன். உழைப்பது அவர்களுக்கு ஆனந்தம் தருகிறது. அவர்களால்தான் இந்தியா உயிர் வாழ்கிறது.

To Share :