நந்தீசர் சித்தர்

nanthisarsithar

வீரகன் என்பது நந்தீசர் இயற்பெயராகும். சிவகணங்களில் ஒருவராக இருந்த நந்தீசர் அன்னை உமையவளின் அந்தப்புரக் காவலராக இருந்தவர் ஆவார். ஒரு முறை கயிலையை விட்டு நீங்கிய அன்னை உமையவள், ‘கெளரி’ என்ற பெயருடன் பரமனை எண்ணித் தவமியற்றிக் கொண்டிருந்தார். அப்போது அடிகலன் என்ற அசுரனை அனுமதியின்றி சிவசந்நிதியில் புக அனுமதித்தால் நந்தீசர் பரமனது கோபத்துக்கு ஆளானார். பன்னிரெண்டு வருடங்கள் பூவுலகில் சிலாதர் என்னும் மகரிஷியின் புதல்வராகப் பிறந்து வசிக்குமாறு சாபமும் பெற்றார்.

சிலாதர் மகரிஷி தன் மனைவி சித்தரவதியுடன் இனிதே இல்லறம் நடத்தி வந்தார். ஒருநாள் சிலாதர் மகரிஷியின் ஆசிரமத்துக்கு சப்த ரிஷிகள் வந்தனர். அவர்களை வரவேற்று உபசரித்த சிலாதர் மகரிஷி சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருந்தார். பின் ரிஷிகளைத் தம் ஆசிரமத்தில் உணவு உண்டு செல்லுமாறு வேண்டினார். ஆனால் பிள்ளைகள் இல்லாத வீட்டில் தாங்கள் அன்னம் கொள்ள மாட்டோம் என்றுரைத்து விட்டுச் சென்றுவிட்டனர்.

உடனே மகரிஷி சிவபெருமானை நோக்கி கடுந்தவம் இயற்றத் துவங்கினார். சிவபெருமான் அவரது தவத்தை மெச்சி மகரிஷி முன்பாகத் தோன்றி, “மகரிஷியே…. என்ன வரம் வேண்டும்?” என்று வினவ, மகரிஷி, “ஐயனே… என்றும் இறப்பே இல்லாத மகன் எமக்கு வேண்டும்” என்று வேண்டினார். அதுகேட்டுப் புன்னகைத்த இறைவன். “சிலாதர மகரிஷியே… யாகம் ஒன்றினை நீ செய்வாயாக. அவ்வாறு செய்தால் உனக்கு அப்படிப்பட்ட மகன் கிடைப்பான் எனவுரைத்து மறைந்தருளினார்.”

அதுகேட்டு மகிழ்ந்த சிலாதர் மகரிஷி உடனே தாம் யாகம் இயற்ற வேண்டி நிலத்தை உழத் துவங்கினார். அப்போது பூமியிலிருந்து அவருக்கு ஓர் மாணிக்கப் பெட்டி கிடைத்தது. அதனுள் ஜடா முடியோடு நான்கு கரங்களுடன் நந்திதேவர் இருந்தார். அதுகண்டு திகைத்த மகரிஷி, “ஐயனே… இதனை நான் எப்படி வளர்ப்பேன்?” என்று மயங்கினார். அப்போது, “மகரிஷியே.. மீண்டும் பெட்டியை மூடித் திற” என்று அசரீரியாக இறைவனது கட்டளை பிறந்தது.

உடனே மகரிஷி நந்தி தேவர் இருந்த பெட்டியை மூடித் திறக்க, அதனுள் ஓர் அழகிய குழந்தை இருந்தது. சிலாதர் மகரிஷி தனது யாகத்தை மகிழ்வுடன் செய்து முடித்தார். பின் அக்குழந்தை சிலாதர் மகரிஷி தம்பதியரின் அன்புப் புதல்வனாக வளர்ந்தது. இறையருளால் சிலாதர் மகரிஷி தம்பதிக்கு ஓர் மகனும் பிறந்தான்.

என்றென்றும் சிரஞ்சீவியாக இருக்க வேண்டும் என்று கடுந்தவம் இயற்றிப் பெற்ற பிள்ளை தன் பன்னிரெண்டாம் வயதில் மித்திர வருணரால் மரணமடைவான் என்று அறிந்து சிலாதர் மகரிஷியும் அவரது மனைவியும் பெருந்துக்கம் அடைந்தனர். வீரர்கள் பன்னிரெண்டு வருடங்களே பூவுலகில் வாழ வேண்டும் என்னும் சாபத்தால் உண்டான வினையது. ஆனால் இறை இரகசியம் சிலாதருக்கு எவ்வாறு புரியும்?

ஒருநாள் தனது தாய் தந்தையர் மிகுந்த துயருற்று இருப்பதைக் கண்ட அப்பிள்ளை அதன் காரணம் என்ன? என்று தன் தாய் தந்தையரை வற்புறுத்தி வேண்டியது. அதற்கு அவர்கள் விபரம் கூறினர். அதுகேட்ட அப்பிள்ளை, “தந்தையே என்றும் இறவாத் தன்மை உடைய பிள்ளை கிடைப்பான் என்று தங்களுக்கு வரமளித்த அந்தச் சிவபெருமானிடமே இதற்கு நியாயம் கேட்கிறேன்” எனவுரைத்து திட வைராக்கியத்துடன் சிவபெருமானை எண்ணித் தவமியற்றத் துவங்கியது. பல ஆண்டுகளாகக் கடுந்தவம் இயற்றிய பின் அப்பிள்ளையின் முன்பாக இறைவன் தோன்றியருளினார்.

அப்போது நந்தீசர், என்றும் தான் இறையடி நீங்காதிருக்கவும், சிவகணங்களுக்குத் தலைமை வகித்திடும் அதிகாரத்துவமும், சிவத்துவங்களுக்கு ஆசானாக விளங்கும் மெய்ஞ்ஞானாசாரியத் தத்துவமும் இறைவனிடம் பெற்றார். பின் தேவர்களின் இதயக் கமலத்தில் இருந்து தோன்றிய சயஞ்ஞை என்பவளை மணந்து சிவலோகத்தில் எழுந்தருளும் பாக்கியத்தையும் பெற்றுத் திரும்பினார். இது நந்திதேவர் வரலாறு ஆகும்.

To Share :