புரட்டாசி மாதத்திலும் மார்கழியிலும் விழாக்கள் அமர்க்களப்படும். முக்கியமாக பங்குனி புனர்பூச நட்சத்திர நாளையொட்டி, ராமநவமித் திருவிழா விமரிசையாக நடைபெறுகிறது. பத்துநாள் விழாவாக தினமும் உத்ஸவம் சிறப்பு பூஜைகள் என கோலாகலமாக நடைபெறும், ராமநவமிப் பெருவிழா.
கோயில் நகரம் கும்பகோணத்தில் முக்கியமான வைஷ்ணவத் தலங்களில் முதன்மையானது என்று ராமசுவாமி கோயிலைப் போற்றுகின்றனர் பக்தர்கள். கோயிலின் மதிலும் கோபுரம் மிகப் பிரமாண்டமாகக் காட்சி தந்து, நம்மை பிரமிக்கச் செய்கிறது. மண்டபங்களும் தூண்களும் தூண்களில் சிற்பங்களும் சிற்பங்களின் நுட்பங்களும் ரசனையுடன் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. ரகுநாத நாயக்க மன்னரின் ஆட்சிக்காலத்தில், கோயிலுக்கு ஏராளமான திருப்பணிகள் செய்து, விரிவாக்கப்பட்டுள்ளன என்பது குறித்த கல்வெட்டுகள் இருக்கின்றன.
ராமரும் கிருஷ்ணரும் எப்போதுமே கொள்ளை அழகு. அதிலும் இங்கே உள்ள கருவறையின் ராமர்பெருமான் அத்தனை அழகு மிளிர, மிகுந்த சாந்நித்தியத்துடன் காட்சி தருகிறார். சத்ருக்னன் சாமரம் வீசிக் கொண்டிருக்க, லட்சுமணன் ராமரின் வில்லையும் தன்னுடைய வில்லையும் ஏந்திக் கொண்டிருக்க, பரதன் குடைப்பிடித்தபடி இருக்க, அனுமன் ஒரு கையில் வீணையையும் இன்னொருகையில் ஓலைச்சுவடியையும் ஏந்தியபடி காட்சி தரும் நேர்த்தி, சிலிர்க்க வைக்கிறது. இவர்களுக்கு நடுநாயகமாக, பட்டாபிஷேக திருக்கோலத்தில், பட்டாபிஷேக ராமராக, மனைவி சீதையுடன் சேவை சாதிக்கிறார்.
வாழ்வில் ஒருமுறையேனும் கும்பகோணம் ராமசுவாமி கோயிலுக்கு வந்து அவரைக் கண்ணாரத் தரிசித்தாலே, குடும்பத்தில் ஒற்றுமை தவழும். அன்பான, அனுசரணையான வாழ்க்கைத் துணை அமையும். துன்பங்களையெல்லாம் துடைத்தருள்வார் ராமபிரான். இழந்த பதவியையும் மீட்டெடுத்துத் தந்தருள்வார் என்கின்றனர் பக்தர்கள்.
ஸ்ரீராம நவமி. இந்த நாளில், ஜகம் புகழும் ராமபிரானை மனதார வேண்டுவோம். இல்லத்தில் சுபிட்சம் பொங்க இனிதே வாழ்வோம்.